Wednesday, October 12, 2005

சென்னைப் பெருமழையும் நெகிழ்ச்சியானதொரு சந்திப்பும்

எனது பிரமிக்க வைக்கும் கௌசல்யா பதிவின் இறுதியில் வைக்கப்பட்டிருந்த (கௌசல்யாவின் மருத்துவக்கல்வி உதவிக்கான) கோரிக்கையைத் தொடர்ந்து பல வலைப்பதிவு நண்பர்கள் பணவுதவி செய்தனர். கிட்டத்தட்ட 30,000க்கு மேலான ஒரு தொகை திரண்டது. அதிலிருந்து ரூபாய் இருபத்தைந்து ஆயிரத்தை கௌசல்யாவிடம் சேர்ப்பிக்கவும், மீதித் தொகையை மற்றொரு ஏழை மாணவிக்குத் தரவும் நண்பர்களின் ஒப்புதலுடன் முடிவெடுக்கப்பட்டது.

கௌசல்யா குறித்து முதலில் செய்தி வெளியிட்ட DECCAN CHRONICLE(DC) அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு, அந்த நாளிதழின் Chief of News Bureau, பகவன் சிங் அவர்களிடம் கௌசல்யாவை சந்தித்துப் பேசவும், திரட்டியத் தொகையை வழங்கவும் ஏற்பாடு செய்யுமாறு விண்ணப்பித்தேன். சற்று நீண்ட காத்திருப்பிற்குப் பின் பகவன் அவர்கள் அந்தச் சந்திப்பை இன்று மதியம் 3 மணி அளவில் ஏற்பாடு செய்திருந்தார். சரியான மழை நாளில் அது அமைந்து விட்டது! திரு.டோண்டு ராகவனையும், ரஜினி ராம்கியையும் DC அலுவலக சந்திப்புக்கு வருமாறு அழைத்திருந்தேன்.

வீட்டிலிருந்து கிளம்பும்போது ஓரளவு மழை பெய்து கொண்டிருந்தது. என் மனைவிக்கு நங்கநல்லூர் செல்ல வேண்டிய வேலை இருந்ததால், கால் டேக்ஸி எடுத்துக் கொண்டு, போகும் வழியில் கத்திப்பாரா சந்திப்பில் என்னை இறக்கி விட்டுப் போகுமாறு கூறினேன். கத்திப்பாராவை நெருங்கும்போது வானம் மடை திறந்தாற் போல் மழை பெய்யத் தொடங்கியது! ஒழுங்கு மரியாதையாக DC அலுவலக வாசலில் இறங்கிக் கொள்ளாமல், "நான் பார்த்துக் கொள்கிறேன். நீ கிளம்பு!" என்று (DC அலுவலகம் அருகில் இருப்பதாக எண்ணிக் கொண்டு) மனைவியிடம் ஜவடாலாகக் கூறிவிட்டு கத்திப்பாராவில் இறங்கி விட்டேன்!

நூறடி சாலையில் மழைக்கு ஒதுங்கக் கூட இடமில்லாமல், சுமார் ஒன்றரை கி.மீ நடந்து DC அலுவலகம் போய்ச் சேர்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது! அதுவும் DC அலுவலகம் அமைந்த தெரு, முழுதும் சேறும் சகதியுமாக இருந்தது! அலுவலகம் உள்ளே சென்றவுடன், உள்ளுக்கும் வெளிக்கும் ஆன சூழல்களில் இருந்த வித்தியாசம், முகத்தில் அறைந்து வரவேற்றது!!! அவ்வளவு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கட்டடம் அது!

பகவன் சிங் அவர்களின் அறையில் அவருக்காகக் காத்திருந்தபோது டோண்டு ராகவன் வந்து சேர்ந்தார். ராம்கியால் வர இயலவில்லை. பகவன் சிறிது நேரத்தில் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். மனிதர் மிக எளிமையாகவும், நட்பு பாராட்டுபவராகவும் இருந்தார். அவர் பெயர் வடக்கத்தித்தனமாக இருந்தாலும் பகவன் நல்ல தமிழில் பேசியது மனநிறைவாக இருந்தது. மழை காரணமாக கௌசல்யா வந்து சேர சற்று தாமதம் ஆனது. நானும், ராகவனும், பகவன் அவர்களும் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தோம்.

தமிழ் வலைப்பதிவுகள், தமிழில் பதிக்கத் தேவையான மென்பொருட்கள், தமிழ்மணம் சேவை ஆகியவை குறித்து பகவன் அவர்களிடம் எடுத்துக் கூறினோம். அவற்றை பொறுமையாகக் கேட்டுக் கொண்ட அவருக்கு, தமிழ்மணம் வெப்சைட்டை அவரது கணினியில் திறந்து காண்பித்தேன். பகவன் தன் கீழே பணி புரியும் பத்திரிகையாளர் ஒருவரை அழைத்து தமிழ் வலைப்பதிவுகள் குறித்து கட்டுரை ஒன்றை தயாரித்து DCயில் வெளியிட ஆவன செய்யுமாறு கூறினார்! அதற்கு வேண்டிய உதவி செய்யுமாறு எங்களையும் கேட்டுக் கொண்டார்.

தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் கூறியபடி, நாங்கள் பேசுவதையும் செவிமடுத்தபடி, கணினியில் ஒரு கட்டுரையை தட்டச்சும் செயதபடி, சக பணியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கியபடி, (இவற்றுக்கு இடையில் எங்களுக்கு காபி வரவழைத்துத் தந்து!) பகவன் சிங் இயங்கியதைக் காண சற்று பிரமிப்பாகவே இருந்தது!!!

ஒரு வழியாக கௌசல்யா DC அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தார். அவரை சந்தித்து நானும் ராகவனும் பேசினோம். First Impression is always the Best Impression என்பதற்கு ஏற்றாற் போல நற்குணமும் கல்வியார்வமும் மிக்கவராக கௌசல்யா தோற்றமளித்தார்! 12-வது வகுப்பு பொதுத் தேர்வில் இயற்பியல் (199/200) தவிர கணிதம், வேதியியல், உயிரியல் பாடங்களில் 200/200 வாங்கிய, பொது நுழைவுத் தேர்வில் 98.33% பெற்ற, தாய் தந்தையற்ற அப்பெண்ணுக்கு, நமது தமிழ் வலைப்பதிவர்கள் சார்பில் உதவ முடிந்தது குறித்து மிகுந்த மனநிறைவு எனக்கு! அத்தகைய மதிப்பெண்கள் பெற எத்தகைய அசாதாரண உழைப்பு தேவை என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

ஒரு வருடத்திற்கு படிப்பு மற்றும் இதரச் செலவுகளுக்கு சுமார் 40000/- தேவையிருப்பதாகக் கௌசல்யா கூறினார். ரூபாய் 25000-க்கான காசோலையை அவரிடம் கொடுத்து, அடுத்த வருடமும் அவரது படிப்புக்கு இயன்ற அளவு உதவி செய்ய முயற்சிப்பதாகக் கூறி விடை பெற்றோம். DC பத்திரிகை சார்பிலும் கௌசல்யாவுக்கு உதவி அளிக்கப்படுவதாக அறிந்தேன்.

பின்னர், DC அலுவலக வாசலிலிருந்து நூறடி சாலை வரை தேங்கியிருந்த குட்டையில் (செருப்பை கையில் பிடித்துக் கொண்டு!) நீந்தியபடி நானும் ராகவனும் ஒரு வழியாக கிண்டியை அடைந்தோம்! மழை பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தது! சொட்ட சொட்ட மழையில் நனைவது கூட, உள்ளம் நிறைவாக இருக்கும்போது, மிகுந்த ஆனந்தமாகவே உள்ளது!!!

உதவிய நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! கௌசல்யாவின் மருத்துவப் படிப்பு முடியும் வரை, அவருக்கு (இயன்ற அளவில்) உதவலாம் என்பது என் எண்ணம். அதற்கு உங்கள் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா

29 மறுமொழிகள்:

பினாத்தல் சுரேஷ் said...

commendable job bala!

wish our efforts will continue in the same direction.

BTW, long time no see?????

இராதாகிருஷ்ணன் said...

நல்ல பணி, பாராட்டுகள்!

SnackDragon said...

//பகவன் தன் கீழே பணி புரியும் பத்திரிகையாளர் ஒருவரை அழைத்து தமிழ் வலைப்பதிவுகள் குறித்து கட்டுரை ஒன்றை தயாரித்து DCயில் வெளியிட ஆவன செய்யுமாறு கூறினார்! அதற்கு வேண்டிய உதவி செய்யுமாறு எங்களையும் கேட்டுக் கொண்டாr//

Good news!! Thanks to you all.

துளசி கோபால் said...

நல்ல விஷயமும் நல்ல செய்தியும்.

வாழ்த்துக்கள் பாலா.

b said...

மகத்தான பணி உங்களுடையது. பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் பாலா.

Ramya Nageswaran said...

நல்ல மனதுடன் ஆரம்பித்த பணியை நிறைவாகச் செய்து முடித்துவிட்டீர்கள். உங்களுக்கு, ராம்கிக்கும் பாராட்டுக்கள்.

இராம.கி said...

பாராட்டப் படவேண்டிய பணி.
கௌசல்யா தன் வாழ்வில் சிறக்க என் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இராம.கி.

said...

Great job bala.


Thank you

அன்பு said...

பாராட்டுக்கள். பகிர்தலுக்கு நன்றி.

said...

பாலா
kudos!
"என்றென்றும் அன்புடன், பாலா" என்பது இப்போது உங்களுக்கு நன்றாக பொருந்துகிறது ;-)

அன்புடன்,
தேசிகன்

மதுமிதா said...

என்றென்றும் அன்புடன் பாலா

உங்கள் பணி சிறந்தது
மனமார்ந்த நன்றியினைத் தெரிவிக்கிறேன்

பெருமழை போன்று கௌசல்யாவின் படிப்பிற்கு விடாத உதவி சென்று சேர அன்புள்ளங்கள்
அணிவகுத்து உதவுவர்

கௌசல்யா சகல நலன்களும் பெற்று குறிக்கோளில் வெற்றியடைய பிரார்த்திக்கிறோம்

தருமி said...

நினச்சத உட்னே செஞ்சிருக்கணும்...இப்ப பாருங்க நான் நினச்சதை தேசிகன் சொல்லிட்டாரு: ""என்றென்றும் அன்புடன், பாலா" என்பது இப்போது உங்களுக்கு நன்றாக பொருந்துகிறது ;
-)" எப்போதும் பொருந்த வாழ்த்துக்கள்.

ramachandranusha(உஷா) said...

பாலா, இனி எதிர்காலத்திலும் கெளசல்யாவுக்கு உதவி தேவையாய் இருக்கும். சாதி, சமயம் பார்க்காமல் ஏழை மாணவ மாணவியர்களுக்கு உதவி செய்ய நானும் தயாராய் இருக்கிறேன். இந்த கெளசல்யா விஷயம் என் கண்ணில் விழவில்லை.
மேற்கொண்டு ஏதாவது திட்டம் இருந்தால் ramachandranusha@yahoo.co.in க்கு மெயில் தட்டுங்க.

enRenRum-anbudan.BALA said...

சுரேஷ்,
நன்றி.
//BTW, long time no see?????//
பணிச்சுமை சற்று அதிகமாக உள்ளது.

இராதாகிருஷ்ணன்,கார்த்திக்,துளசியக்கா,மூர்த்தி,ரம்யா,இராம்.கி ஐயா, ஜெயஸ்ரீ, சிங்கை அன்பு, தேசிகன், தருமி, மதுமிதா
உங்கள் அனைவருக்கும் நன்றி.

உஷா,
உதவ முன் வந்ததற்கு நன்றி. தொடர்பு கொள்கிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா

ஜெ. ராம்கி said...

உதவி செய்த நண்பர்களுக்கு நன்றி. மூன்று மாதங்களாக இதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்த பாலாஜியைப் பற்றி ஓரிரு வரிகளில் நிச்சயம் சொல்லிவிடமுடியாது. பிரச்னையை மீடியாவில் கொண்டுவருவதோடு தன்னுடைய வேலை முடிந்துவிட்டதாக கைகழுவும் தினசரிகளுக்கு நடுவே டெக்கான் ஹெரால்டு ஒரு தனி ரகம். எங்களது இணையத்தளத்தின் மூலமாக செய்யப்படும் உதவிகளில் ஒரு நிபந்தனை அல்லது எதிர்பார்ப்பு கட்டாயமாக இருக்கும். கெளசல்யா விஷயத்திலும் அது பொருந்தும் என்றே நினைக்கிறேன். படித்து முடித்துவிட்டு நல்ல முறையில் செட்டிலான பின்னர் கெளசல்யா தன்னைப்போன்று கஷ்டப்படும் பத்து கெளசல்யாக்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கவேண்டும் என்பதுதான் அந்த எதிர்பார்ப்பு. கெளசல்யாவிடம் நிச்சயம் இதை எதிர்பார்க்கலாம் என்கிறார் பாலாஜி. பார்க்கலாம்.

முகமூடி said...

// கௌசல்யாவின் மருத்துவப் படிப்பு முடியும் வரை, அவருக்கு (இயன்ற அளவில்) உதவலாம் என்பது என் எண்ணம். //

கண்டிப்பாக.

நன்றி பாலா & ராம்கி

kirukan said...

well done guys

enRenRum-anbudan.BALA said...

Ramki,mugamoodi, Kirukan,
nanRi.

Nambi said...

Good job, Bala

ஜோ/Joe said...

பாலா,ராம்கி,டோண்டு சார் ..பாராட்டுக்கள்!
பாலா,தனி மடல் அனுப்பியிருக்கிறேன்.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

மிகவும் நல்ல பணி. வாழ்த்துக்கள்.

ச.சங்கர் said...

அன்புள்ள பாலா ,
பின்னிட்ட கண்ணா,
A job well done.
பங்களித்த ஊக்கமளித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.
முயற்சி மென்மேலும் தொடரட்டும்.
அன்புடன்...ச.சங்கர்

Vijayakumar said...

பாராட்டுக்கள் பாலா.

enRenRum-anbudan.BALA said...

nambi,Joe,selva,sankar,vijay,

naNri !

-L-L-D-a-s-u said...

என்றென்றும் அன்புடன், பாலா" என்பது இப்போது உங்களுக்கு நன்றாக பொருந்துகிறது ..


வழிமொழிகிறேன்

enRenRum-anbudan.BALA said...

LL Dasu avarkaLE ;-)

nanRi !!!

dondu(#11168674346665545885) said...

உங்கள் நல்ல எண்ணத்தின் பலத்தில் இம்முறையும் முயற்சி வெற்றியடையும் என்பதில் சந்தேகமில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Balaji S Rajan said...

உங்கள் நல்ல எண்ணம், பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி. முதல் தடவையாக தங்கள் வலைப்பதிவிற்கு வருகை செய்தேன். கவுசல்யா போன்ற பெண்ணிற்கு உதவி செய்ததை படித்ததில் ஆனந்தத்தில் கண்களில் கண்ணீர் முட்டியது. தொடர்க உங்கள் நற்பணி. ஏதாவது உதவி வேண்டும் என்றால் உங்கள் வலைப்பதிவு மூலம் தெரியப்படுத்தவும். எங்களால் முடிந்ததை செய்கிறோம்.

மெளலி (மதுரையம்பதி) said...

பாலா....

நல்ல காரியம் செய்கிறிர்கள்.....வாழ்த்துக்கள்.....

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails